தேர்தல் வரும் வேளையில் சகட்டுமேனிக்கு பொய் செய்திகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முடிந்தவரை மக்கள் மனதை குழப்புவதற்காக அரசியல் கட்சிகள் பரப்புவது அதிகமாகிவிட்டது. அதுவும் சமூக வலைத்தளங்களில் உண்மையை விட பொய் செய்திகள் வேகமாகவும் அதிகமாகவும் பரப்பப்படுகிறது. பின்னால் வரும் விளக்கங்களும் உண்மைகளும் அதே அளவு சென்று சேர்வதில்லை.
கோயம்புத்தூரில் இருக்கும் ஈஷா யோகா மையம் இத்தகைய தவறான பொய்ப் பிரச்சாரங்களினால் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வேலியில் யானை மின்சாரம் தாக்கப்பட்டது முதல், பல உண்மைகள் திரிக்கப்பட்ட பல செய்திகள் அவர்களுடைய நற்பெயரை கெடுப்பதற்காக பரப்பப்பட்டது அனைவரும் அறிந்த விஷயமே.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தேர்தல்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், கலைஞர் செய்திகள் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு சட்டவிரோதமான முறையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் இது தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் நடந்த பயங்கர மோசடி எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
இதை அடுத்து ஈஷா யோகா மையம் இந்த பொய் செய்தியை எதிர்த்து விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "ஈஷா யோக மையத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ளனர். அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு" என்று கூறி தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் செய்திகள் என அனைவருக்கும் டாக் போட்டுள்ளனர்.
பல வருட காலமாக ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பவர்கள் அங்கே தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய முறையாக அடையாள அட்டை வாங்கி இருக்கும் நிலையில் இதுகுறித்து பொய் பிரச்சாரங்களை தி.மு.க பரப்பி வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.