FactCheck: உச்சநீதிமன்றக் கிளைகளை மெட்ரோ நகரங்களில் நிறுவுகின்றதா மத்திய அரசு ?
ஏழைகள் எளிதாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் இத்தகைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
டெல்லியில் மட்டுமில்லாமல், நாட்டின் பல பிராந்தியங்களில் உச்ச நீதிமன்றத்தின் பெஞ்சுகளை (கிளைகளை) நிறுவுவது என்பது பல மாநிலங்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமாளிக்கவும், நாட்டின் தொலைதூர பகுதிகளில் வாழும் ஏழைகள் எளிதாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் இத்தகைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
இப்போது, சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு பதிவு, மத்திய அரசு மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய பெஞ்சுகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.
"பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை சென்னை, மும்பை மற்றும் கல்கத்தா ஆகிய மூன்று இடங்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தை அணுக டெல்லிக்கு பயணம் செய்ய வேண்டியவர்களுக்கு இது ஒரு சிறந்த நடவடிக்கை" என்று அந்த பதிவு கூறுகிறது.
இது உண்மையா?
இல்லை. இப்போதைக்கு, இதுபோன்ற எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் பிராந்திய பெஞ்சுகளைத் தொடங்க மத்திய அரசு எடுத்த முடிவு நிச்சயமாக தலைப்புச் செய்திகளை உருவாக்கியிருக்கும். ஆனால் அவ்வாறு எந்த ஊடக செய்திகளும் வரவில்லை.
மேலும், ஆகஸ்ட் 4, 2021 அன்று, மக்களவையில், "உச்ச நீதிமன்றத்தை அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் டெல்லியில் மேல்முறையீட்டு நீதிமன்றம் எனப் பிரித்து, பின்னர் நாட்டின் நான்கு பகுதிகளில் ஒவ்வொன்றாக நிறுவ மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததா?" என்ற எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் (Subjudice) இருக்கிறது என்று தெளிவுபடுத்தினார்.