FactCheck: மதராஸா மாணவர்கள் ராணுவத்தில் சேர திட்டம் கொண்டு வந்துள்ளதா மத்திய அரசு?
மத்திய அரசு இராணுவத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை.
மதராஸா மாணவர்களை ராணுவத்தில் சேர்க்கும் சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று ஒரு வாட்ஸ்அப் ஃபார்வர்ட் வைரலாகி வருகிறது. 'இராணுவத்தில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது' என்று அந்த செய்திகள் குற்றம் சாட்டுகிறது.
உண்மை என்ன?
இது, ஜூலை 28 அன்று வெளியான ஜாக்ரான் பத்திரிகை அறிக்கையால் ஏற்பட்ட குழப்பம் போல் தெரிகிறது. உத்திர பிரதேச மதராஸா வாரியம், பள்ளி கல்வி வாரியங்களின் கவுன்சில் (COBSE) உறுப்பினராக விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது என்பது தான் அந்த செய்தி.
மதராஸா வாரியத்திற்கு அங்கீகாரம் இல்லாததால், அதன் மாணவர்கள் ராணுவம் உள்ளிட்ட அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. வாரியம் அங்கீகாரம் பெற்றிருந்தால், மாணவர்கள் அரசு வேலைகளுக்கும், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
"ஆயுதப் படைகள் மற்றும் பல வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் எங்கள் வாரியத்தின் கல்விச் சான்றிதழை ஏற்கவில்லை என்பது சமீபத்தில் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நாங்கள் இப்போது COBSE அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளோம், "என்று வாரிய பதிவாளர் RP சிங் கூறினார்.
எனவே, மத்திய அரசு இராணுவத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை. UP மதராஸா வாரியம் COBSE அங்கீகாரத்திற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளது, இது அவர்களின் மாணவர்களை இராணுவ வேலைகளுக்கு தகுதியுடையதாக ஆக்குகிறது.
COBSE என்றால் என்ன?
COBSE என்பது இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு. அசாம் சமஸ்கிருத வாரியம், அசாமில் உள்ள மாநில மதரஸா கல்வி வாரியம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பீகார் பள்ளிக் கல்வி வாரியம் உள்ளிட்ட பல கல்வி வாரியங்கள் இதில் உறுப்பினராக உள்ளன. தற்போது அதன் உறுப்பினர்களில் 67 வாரியங்கள் உள்ளன.