வரி வாங்கியதை விட தமிழகத்துக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறோம் - போட்டுடைத்த நிர்மலா சீதாராமன்!
2014 முதல் 2023ம் ஆண்டு வரை தமிழகத்திடமிருந்து பெற்ற வரியை விட கூடுதல் நிதி திரும்ப கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என திமுகவினர் பரப்பி வந்த பொய் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாம்பலத்தில் மத்திய அரசின் திட்டம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிர்மலா சீதாராமன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
தமிழகத்திடமிருந்து வாங்கியதை விட அதிகமாக கொடுத்திருக்கிறோம். 2014-2023 மார்ச் வரை தமிழகத்திடமிருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது.
ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6.96 லட்சம் கோடியை கொடுத்திருக்கிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.37,965 கோடியும், பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, ரூ.11,116 கோடியும், கிராமப்புறத்தில் வீடுகள் கட்டுவதற்காக ரூ.4,836 கோடியும் கொடுத்துள்ளோம்.
தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.36,350 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.37,370 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குதான் கொடுத்துள்ளோம்.
சொல்லப்போனால் மாதம் மாதம் கொடுக்க வேண்டிய இந்த தொகை பல நேரங்களில், தீபாவளிக்கு செலவு இருக்குமே, பொங்கலுக்கு செலவு இருக்குமே என்று சீக்கிரமாகவே கொடுத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.