இந்திய அரசு, தொழில்சார் கடமைகளின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் பணிபுரியும் பெண்களுக்கு நம்பகமான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக "பணிபுரியும் மகளிர் விடுதித் திட்டத்தை" தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தங்கும் விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிய கட்டிடங்கள் அல்லது தற்போதைய கட்டிடங்களை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசாங்கம் மானியம் வழங்குகிறது. மத்திய அரசின் பங்கு 60 சதவிகிதம் மாநில அரசின் பங்கு 40 சதவிகிதம் ஆகும்.
தோழி பெண்கள் தங்கும் விடுதி
மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு தோழி பெண்கள் தங்கும் விடுதி என மாற்றியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள் , ஓரிரு நாட்கள் கூட மகளிர் விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.