சுவிஸ் வங்கியில் பா.ஜ.க தலைவர்களின் கருப்பு பணமா? பரவும் தகவலின் உண்மை என்ன?
பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 24 இந்திய அரசியல் தலைவர்கள் இங்கிலாந்தில் உள்ள வங்கியில் கறுப்புப் பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்திருப்பதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட போலிப் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சமூக வலைதள பயனாளர் ஒருவர் இந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பாஜக தலைவர்களின் பெயர்களை முற்றிலுமாக வரிசைப்படுத்தி அதில் அவர்கள் இங்கிலாந்து வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு தன்னுடைய பதிவை பகிர்ந்து இருக்கிறார். இந்த செய்தியின் உண்மை தன்மையை குறித்து தற்போது பார்க்கலாம்.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சமீபத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, "மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் கறுப்புப் பணம் அம்பலமானது. பிரிட்டனில் ரகசியமாக சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது" என்று வைரலான கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் ஸ்மிருதி இராணி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தற்போதைய அரசில் பதவி வகிக்கும் பாஜக தலைவர்களின் பெயர்கள், ரகசியமாக வங்கிகளில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்ததாகக் குற்றம் சாட்டி அந்தப் பதிவுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. இப்படி ஆளும் தலைவர்களை குற்றஞ்சாட்டி பகிரப்படும் புகைப்படம் இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே இது போன்று 2011ம் ஆண்டும் நடந்து இருக்கிறது. ராஜீவ் காந்தி, ஆ.ராஜா, ஹர்ஷத் மேத்தா, சரத் பவார், ப.சிதம்பரம், சுரேஷ் கல்மாடி, முத்துவேல் கருணாநிதி போன்ற இந்திய அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கி கார்ப்பரேஷனில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என்று இந்திய அரசியல்வாதிகளைக் குறிப்பிடும் எந்தப் பட்டியலும் தற்போது கிடைக்கவில்லை. அத்தகைய பட்டியலை விக்கிலீக்ஸின் எந்தவொரு பதிவிலும் குறிப்பிடப்படவில்லை. இந்த தகவல் முற்றிலும் போலியானது என்று விக்கிலீக்ஸ் ஏற்கனவே கூறியுள்ளது. எனவே சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் பாஜக தலைவர்களின் பெயர்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது என்ற தகவல் முற்றிலும் போலியானது.
Input & Image courtesy:News