தங்க தகடு பொருத்த 6 மாதங்களுக்கு திருப்பதி கோயில் மூடப்படுகிறதா? தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இதனால், 6 மாதங்கள் வரை கோயில் மூடப்படுகிறது என சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.
இதை நம்பவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தீர்மானம் செய்தபடி, வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் கோயில் தங்க விமான கோபுரத்தில் தங்க தகடுகள் பொருத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.
பாலாலய பணிகள் ஆகம விதிகளின்படி நடைபெற உள்ளது. ஆனால், மூலவர் தரிசனம் நிறுத்தப்பட மாட்டாது. இந்த கால கட்டத்தில், பாலாலயம் கோயில் அருகே ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் மூலவரையும், பாலாலய கோயிலையும் தரிசனம் செய்யலாம்.
காலை முதல் இரவு வரை அனைத்து சேவைகளுமே ஏகாந்தமாக நடைபெறும். திருக்கல்யாணம், ஆர்ஜித பிரம்மோற்சவ சேவை போன்றவை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பருக்கு நடத்தப்படும்.
திருப்பணிகள் நடந்து முடிந்தபின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Input From: TTD Online