அனைத்து ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளுக்கும், அனுமதிக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு - அவசர உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு!

Update: 2021-04-17 01:30 GMT

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் டேங்கர்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்படி அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையே எளிதான போக்குவரத்தை மேற்கொள்ள அனைத்து ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளுக்கும் , அனுமதிக்கு பதிவு செய்வதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

தேவைக்கேற்ப ஆக்ஸிஜனை விநியோகிக்க, மாற்று ஓட்டுநர்களுடன் டேங்கர் லாரிகளை 24 மணி நேரமும் இயக்குவதை உறுதி செய்யும்படி மாநிலங்கள் மற்றும் போக்குவரத்து உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் ஆலைகளும், போதிய பாதுகாப்புடன் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்படும். தொழிற்சாலை சிலிண்டர்களையும், சுத்திகரிப்பு செய்து மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பயன்படுத்தி கொள்ள அரசு அனுமதிக்கிறது.

ஆக்ஸிஜன் டேங்கர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, நைட்ரஜன் மற்றும் அர்கான் டேங்கர்களையும், ஆக்ஸிஜன் டேங்கர்களாக மாற்ற அனுமதிக்கப்படும். மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தின் தற்போதைய நிலவரம், கொவிட் பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களில் (மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான்) அடுத்த 15 நாட்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆலோசித்தார்.

அதிகரித்து வரும் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை நிறைவேற்ற, நாட்டில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன் குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது. ஒவ்வொரு ஆலையின் திறனுக்கேற்ப ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

 

Similar News