கடற்படை வீரர்களின் மரண தண்டனை வழக்கு-இந்தியாவின் மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கத்தார் கோர்ட்
8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது தொடர்பான வழக்கில் இந்தியாவின் மேல்முறையீட்டை விசாரணைக்கு கத்தார் கோர்ட் ஏற்றுக் கொண்டது.
இந்திய கடற்படையில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு வீரர்கள் கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த சூழலில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டிய இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேரையும் கத்தார் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களின் ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து கடந்த மாதம் 26-ஆம் தேதி கத்தார் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சி தெரிவித்த இந்தியா எட்டு இந்தியர்களையும் மீட்க அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வதாக உறுதியளித்தது. அதன்படி இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தார் கோர்ட்டில் இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேல்முறையீட்டு மனுவை முழுமையாக ஆராய்ந்த பிறகு விசாரணை தேதி அறிவிக்கப்படும் என கத்தார் கோர்ட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் இதை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE :DAILY THANTHI