பிரதமரின் நிவாரண உதவியின் கீழ் டெல்லியில் இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் - கோயம்புத்தூர் தயாரிப்பு விமானத்தில் பறந்தது!

Update: 2021-05-06 01:00 GMT

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக, பிஎம் கேர்ஸ் நிதியுதவியுடன் இரண்டு அதிக சக்தி வாய்ந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் ஆர்எம்எல் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நிறுவப்பட்டுள்ளன.

போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று, கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்ட இந்த இரு ஆலைகளும் நேற்று நிறுவப்பட்டன.

மார்ச் 5ஆம் தேதி மாலையில் இருந்து இரு ஆலைகளும் ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கின. கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பை திறம்பட கையாளும் நோக்கில், நாடு முழுவதும் 500 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ பிஎம்-கேர்ஸ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் இவைகள் நிறுவப்படும்.

புதுதில்லியை பொருத்தவரை, எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையம், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சஃப்தர்ஜங்க் மருத்துவமனை, லேடி ஹர்திங் மருத்துவ கல்லூரி மற்றும் எய்ம்ஸ், ஜஜ்ஜார், ஹரியானா ஆகிய மருத்துவமனைகளில் ஐந்து ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.

இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை எஃகு நிறுவனங்கள் நாட்டின் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை நிறைவேற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எஃகு நிறுவனங்களின் தலைவர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார்.

அப்போது, மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க முடிந்த அளவு அனைத்தையும் செய்யும்படியும், ஆக்ஸிஜன் வசதி படுக்கைகளுடன் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Similar News