இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்றுமதிகள் அனைத்தும் லைசன்ஸ் ஒப்பந்தம் மற்றும் வர்த்தக ரீதியிலான பொறுப்புகளின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது என்று பாஜக விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் லைட் என்ற தடுப்பூசியும் இந்திய மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதில் மகாராஷ்டிரா புனேவை சேர்ந்த சீரம் என்ற நிறுவனம் கோவிஷுல்ட் தடுப்பூசியும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற தடுப்பூசியும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
இந்தியாவில் தற்போது நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசியை மத்திய அரசு எதற்காக ஏற்றுமதி செய்கிறது என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. இதற்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் சாம்பித் பத்ரா இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் வர்த்தக மற்றும் லைசன்ஸ் ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.
இதுவரை 6.63 கோடி தடுப்பூசிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 84 சதவீதம் இதன் அடிப்படையிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்திய நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி 5.50 போடி தடுப்பூசிகள் இந்தியா ஏற்றுமதி செய்தது என்றும், 1.07 கோடி தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கு உதவியாக அனுப்பி வைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அவற்றில் 79% நம் அண்டை நாட்டிற்கு அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.
அதேபோல் ஐ நா அமைதிப்படைக்கு இந்தியாவிலிருந்து 2 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது என்றும் அங்கு இந்தியர்கள் 6,600 பேர் பணியாற்றுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் அறியாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் உள்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி அளிக்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் தடுப்பூசியை தயாரித்து வரும் இரண்டு நிறுவனங்களில் சீரம் இந்தியா தான் தயாரித்த தடுப்பூசிகள் துணை ஒப்பந்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் அவற்றை மற்ற நிறுவனங்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக மற்ற நிறுவனங்களுடன் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.