புயல் சேதங்களை பார்வையிட குஜராத் செல்லும் பிரதமர் மோடி!

Update: 2021-05-19 04:23 GMT

'டாக்டே' புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். குஜராத்தில் 'டாக்டே' புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரதமர் குஜராத்துக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.




'டாக்டே' புயல் குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த போது குஜராத்தின் பல பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் மற்றும் புயலைத் தொடர்ந்து பெய்த கன மழையினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. மேலும் மரம் சாய்ந்து ஆங்காங்கே கிடப்பதால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவ படையினர் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து வசதியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால் இன்னும் பல இடங்களில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் படியாததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்று நேரில் பார்வையிடுகிறார். காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் செல்லும் மோடி அங்கு ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிடுகிறார். அங்கு பார்வையிட்ட பின்னர் ஜபராபாத்,டையூ,மஹூவா, ஆனா ஆகிய பகுதிகளையும் அவர் பார்வையிட உள்ளார்.\

புயல் பாதிப்பு இடங்களை பார்வையிட்ட பிறகு ஆமதாபாத்தில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு சம்பந்தமாக ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இயற்கைப் பேரிடர்களும் தற்போது மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.

Similar News