குழந்தைகளைக் குறிவைக்கும் புதிய வகை வைரஸ்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!
சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குழந்தைகளை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் சிங்கப்பூரில் இருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அபாயம் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் இப்போது தான் கொரோனா இரண்டாவது அலை தாண்டவமாடி வருகிறது. தமிழகத்திலும் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும் நிலை உள்ளது. இதனால் நாடு முழுவதும் நோய் தொற்று நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சிங்கப்பூர் அரசு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவது முதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய வகை வைரஸ் குழந்தைகளை தாக்கும் அபாயம் இருப்பதால் இந்த வகை வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்தால் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று அஞ்சப்படும் நிலையில் புதிய வைரஸும் பரவினால் பெரும் ஆபத்து நேரும் அபாயம் உள்ளது. இதனால் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களையும் நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவடையாத நிலையில் மூன்றாவது அலை வந்தால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் புதிய வைரஸ் குழந்தைகளைத் தாக்கும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்து வருகிறது.