கொரோனா சிகிச்சை மையத்தில் கழிவறையை கையால் சுத்தம் செய்த பாஜக எம்.பி!

Update: 2021-05-20 04:46 GMT

கொரோனா சிகிச்சை மையத்தில் அடைப்பு ஏற்பட்ட கழிப்பறையை பாஜக எம்.பி. ஒருவர் கழிவறையை கையால் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மிஸ்ரா என்பவர் எம்பியாக இருந்து வருகிறார். இவர் மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தை தீவிரமாக பின்பற்றுபவர் ஆவார். இவர் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மவுகஞ்ச் தெஹ்சில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்வதற்காக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா அங்கு சென்றுள்ளார்.அந்த மையத்தில் கழிவறை அடைப்பு ஏற்பட்டு செல்வதற்கு வழி இல்லாமல் கிடந்ததை பார்த்த அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு அதை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

பின்னர் அந்த கழிவறையை சுத்தம் செய்தனர் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுத்தமாக வைத்திருக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் " இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் முதல் சுகாதார பணியாளர்கள் வரை எந்த வேலையும் பெரியது, சிறியது என்பது கிடையாது. கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டு செல்வதற்கு வழி இல்லாமல் அழுக்காக இருந்ததால் அதனை சுத்தம் செய்தேன். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்".

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தினை தீவிரமாக பின்பற்றி வரும் இவர் இது போல செய்வது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கே கழிவறை அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததை கண்ட அவர் அங்கு கழிவறையை சுத்தம் செய்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் பசு கோமியத்தை குடிக்கிறார்கள், மாட்டு சாணத்தை உடம்பில் பூசிக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடாதது ஏன் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News