அரசுப் பணியாளர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் - மத்திய அமைச்சர்!
அரசு பணியாளர்கள் அனைவரும் விரைந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வடக்கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் இன்று மேற்கொண்டார். அப்போது அரசு அலுவலகங்களில் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதேபோல் அவர்கள் பணிபுரியும் இடங்களில் கண்ணாடி மூலம் தடுப்புகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், கார்களில் ஒட்டுநர் இருக்கை மற்றும் பின்னிருக்கைக்கு இடையே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அரசு முடிவு செய்ததில் இருந்து அரசு பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக வீ கேர் என்னும் வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் பணியாளர்கள் தங்கள் தேவைகளை இந்த குழு மூலம் கேட்டு பயன் அடைந்து கொள்ளலாம் என்று தெரியவருகிறது.