ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு-சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியீடு!

Update: 2021-05-31 09:05 GMT

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என்ற விவரங்கள் அந்தந்த மாநிலத்திற்கு அளிக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி திட்டம் என்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மே மாதத்தில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் மொத்தம் 7,94,05,200 தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகளில் தடுப்பூசி என்பது கொவிட் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான திட்டமாகும்.

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் முறை, மக்கள் தொகை மற்றும் தடுப்பூசி வீணாகும் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முழுவதும் தடுப்பூசிகள் எந்த எண்ணிக்கையில், எங்கு, எப்போது கிடைக்கும் என்பதை மத்திய அரசு முன்கூட்டியே தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்கென 6.09 கோடி தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் 5.86 கோடி தடுப்பூசிகள் என தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்காக ஜூன் 2021 இல் சுமார் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களைச் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டிற்கான விநியோக அட்டவணை முன்கூட்டியே பகிரப்படும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை சுழற்சி மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும், தடுப்பூசி வீணாவதைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே மாதத்தில் 4.03 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 3.90 கோடிக்கும் அதிகமாக டோஸ்களை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்துள்ளன. இந்த வகையில் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் வாயிலாக மே மாதத்தில் மொத்தம் 7,94,05,200 அளவுகள் தடுப்பூசிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News