இதுவரை ஒரு கோடி தடுப்பூசிகளுக்கு மேல் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு அசத்தல்..!

Update: 2021-06-04 04:07 GMT

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றை மறுக்கும் விதமாக மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்துக்கு ஜூன் 2 ஆம் தேதி வரை 1 கோடிக்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் அனைத்தையும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சரிசமமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்கென்று தடுப்பூசி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மேலும் தடுப்பூசிகள் கிடைப்பதை ஒழுங்குபடுத்துவதற்காக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் உடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இதேபோல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பலவிதமான கொள்முதல் வாய்ப்புகளையும் கடந்த மே 1ம் தேதி முதல் மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ஜூன் 2ம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 93.3 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 7.24 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் முதல் 2 வாரத்திற்கு தமிழகத்துக்கு 7.48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் என்றும் அடுத்த 2 வாரத்தில் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் மூலமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் மாநிலத்தின் சராசரி நுகர்வு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு 16.83 லட்சம் தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பு ஊசிகளை சரிசமமாக வழங்கி வரும் மத்திய அரசை சில செய்தி ஊடகங்கள் மற்றும் எதிர்கட்சிகள் குறை கூற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர். மத்திய அரசு மாநிலங்களுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தடுப்பூசிகளை வழங்கி வருகிறது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News