மாணவர்கள் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள் : காணொளி நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்.!
இந்திய நாட்டில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும், நடைபெறாத என்று குழப்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் இருந்து வந்தனர். இதற்கும் முடிவைத் தரும் விதமாக, CBSE பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஜூன் 1-ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொதுதேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை போக்கவும், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி இதை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் தருவதற்காக CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். திடீரென நடந்த இந்த சந்திப்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆச்சரியமடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்ட, இமாசல பிரதேசத்தின் சோலன் நகரில் இருந்து பேசிய மாணவர் ஒருவர், CBSE 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து என்பது ஒரு நல்ல முடிவு என கூறினார்.
அதுபோல் கொரோனா 2வது அலையில் குழுவாக இணைந்து பொதுமக்கள் செயலாற்றிய மற்றும் பங்கு பெற்ற விசயங்களை நாம் காண முடிந்தது. ஒவ்வொரு இந்தியரும் பெருந்தொற்றில் இருந்து வெளியே வந்து வெற்றி பெறுவோம் என்று மாணவர்கள் சார்பாக நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மாணவர்களிடம், நீங்கள் அனைவரும் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கூறினார்.