ஆந்திராவில் இந்து மதத்தை இழிவாக பேசும் ஐ.பி.எஸ் அதிகாரி - நடவடிக்கை பாயுமா?
ஆந்திர மாநிலத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் சுனில் குமார் என்ற ஐ.பி.எஸ் அதிகாரியின் பல்வேறு நடவடிக்கைகள் சமூகத்தில் பிரிவினைகளை உருவாக்கும் வகையில் இருப்பதாக அவர் மீது LRPF என்ற அமைப்பு ன புகார் அளித்துள்ளது. மேலும் "அம்பேத்கர் இந்தியா மிஷன்" என்ற தனியார் அமைப்பின் மூலம் அவர் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை (உரிமைகள் தடை) சட்டம்,1966 இன் பிரிவு 3ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி அரசு ஊழியர் ஒருவர் ஒரு தனியார் அமைப்பை நிர்வகிப்பதன் மூலம் அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார் என்ற புகாரும் எழுந்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் இந்து மதம், வேதங்கள் மற்றும் இந்து கடவுள்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அவர் பட்டியல் இனத்தவரை தூண்டிவிடுகிறார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவின் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தனது "அம்பேத்கரின் இந்தியா மிஷன்" அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் பேஸ்புக் நேரலையில் தோன்றி, இந்து மதம், வேதங்கள் மற்றும் புராணங்கள் போன்ற இந்து மத புனித நூல்களை பற்றி அவதூறாகப் பேசினார். தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் மற்றொரு வீடியோவில் அந்த காவல்துறை அதிகாரி பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்து பேசுவதைக் காணலாம்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது தேவாலயங்கள் கட்டப்பட்டன, மருத்துவமனைகள் கட்டப்பட்டன என்றும் இவை அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியினால் தான் நமக்கு கிடைத்தது என்று பேசியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் "அவர்கள் நம்மை கோவிலுக்குள் விடவில்லை ஆனால் பிரிட்டிஷார் நமக்கு சர்ச் கட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் நமக்கு ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை மறுத்தார்கள். ஆனால் பிரிட்டிஷார் கடவுள் யார் என்பதை நமக்கு உணர்த்தினார்கள். அவர்கள் நம்மை படிக்க விடவில்லை ஆனால் பிரிட்டிஷார் நமக்கு கல்வியை அறிமுகப்படுத்தினார்கள்" என்று அவர் பேசியுள்ளார்.
அவர் பட்டியல் சாதி (எஸ்சி) மக்களுக்கு தனி கிராம பஞ்சாயத்து உருவாக்க போராடுவதாகவும் கூறப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், எஸ்சி மாலா சமூகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், வேறு எந்த சாதியினரையும் எஸ்சி வகை பட்டியலில் சேர்ப்பதை எதிர்ப்பதாகவும் கூறினார். மேலும் இந்து மதத்தில் எஸ்சியாக இருப்பவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறிய பின்னர் அவர்களுக்கு கிறிஸ்தவ எஸ்சி அந்தஸ்து தர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.