இந்திய நாட்டின் விதிமுறைகளுக்கு இணங்குகிறோம் : ட்விட்டர் நிறுவனம்!

Update: 2021-06-10 12:46 GMT

சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பேஸ்புக், ட்விட்டர் போன்ற  சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்தி, அதை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது வந்த நிலையில் தற்போது, இந்த  கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மாதம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி அந்த நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குறைதீர்வு அதிகாரி, ஒரு நோடல் அதிகாரி மற்றும் முதன்மை இணக்க அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும். மனதை புண்படுத்தும் விதமான பதிவுகளை குறிப்பிட்ட உடன் 36 மணி நேரத்தில் நீக்க வேண்டும். மேலும் இந்திய இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு போன்றவற்றை குலைக்கும் தகவல்களை முதலில் யார் வெளியிடுகிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும் . இதற்கு இணங்கவில்லை என்றால் அந்தக் கருத்துகளுக்காக கிரிமினல் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது.


இதற்கு பேஸ்புக் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் முதலில் இணங்க மறுத்த நிலையில், அரசு ட்விட்டருக்கு இறுதி வாய்ப்பு வழங்கி ஏற்கவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியிருந்தது. ட்விட்டர் நிறுவனம்  மத்திய அரசிடம் சில நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், தற்போது அரசின் கட்டுப்பாடுகளுக்கு இறங்குவதாக கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.


ட்விட்டர் நிறுவனம் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது "இந்த விதிமுறைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்திய பணியாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க நல்லெண்ணத்துடன் முயற்சித்துள்ளோம். வழிகாட்டுதல்களை ஏற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செய்வதை, உலகளாவிய பெருந்தொற்று பாதிப்பு மிகவும் சிக்கலாக்கிவிட்டது. இந்தியாவில் பொது உரையாடலுக்கான ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியுடன் இருக்கிறோம். குறிப்பாக முக்கியமான தருணங்களில், தற்போது காணும் நெருக்கடியான சூழலில் மக்களுடன் இருப்போம்." என்று அதில் கூறி இருந்தது. 

Tags:    

Similar News