சிம்லாவை நோக்கி படையெடுக்கும் மக்கள் : ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு.!
இந்தியாவில் தற்போது குறைந்து வரும் தொற்று நோய்க்கும் மத்தியில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களுக்கு முக்கிய வருவாயாக திகழ்கிற சுற்றுலா துறைக்கு தற்பொழுது கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளனர். குறிப்பாக குளிர் பிரதேசங்களில் ஜூன் மாதங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் செல்வார்கள். அந்த வகையில் தற்போது இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து உள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தற்பொழுது இமாச்சலபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று 237 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப் பட்டிருந்த 144 தடை உத்தரவு மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், வேறு மாநிலங்களில் இருந்து இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்பது நீக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு மாநிலங்களில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்குள் நுழைய இ-பாஸ் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் மக்கள் இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலாதளமாக உள்ள சிம்லாவுக்கு செல்வதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நேற்று முதல் இமாச்சலப்பிரதேசத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால், இமாச்சலபிரதேச எல்லை மற்றும் சிம்லா பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.