தடுப்பூசிக்கு மத்திய அரசு கொடுக்கும் விலை கட்டுப்படி ஆகவில்லை: பாரத் பயோடெக் நிறுவனம்.!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போது இரண்டு வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் ஆகும். கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரையில் கோவாக்சின் தயாரிப்பு பணிகளை மேம்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கான வசதிகளை அமைத்தல் ஆகியவற்றிற்காக இதுவரை சுமார் ரூ.500 கோடியை முதலீடு செய்துள்ளது.
இதன் காரணமாக தற்பொழுது கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.150 என்னும் விலை கட்டுப்படி ஆகவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது உள்ள பேரிடர் காலத்தில் மத்திய அரசுக்கு கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கி வருகிறது. இதனிடையே, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 150 என்ற விலை கட்டுபடியான விலை அல்ல என்றும், நீண்ட காலத்திற்கு அந்த விலையில் தடுப்பூசிகளை கொடுப்பது சாத்தியம் அல்ல என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளின் மூலப்பொருட்களின் விலை உயர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் இருப்பதால், அதனை ஈடுசெய்ய தனியார் சந்தைகளில் அதிக விலையில் விற்க வேண்டிய அவசியம் இந்நிறுவனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளதாம்.