'நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலில் அதிகரிப்பதற்கு யோகா பயிற்சி உதவும்' : ஹர்ஷவரதன்!
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இந்த வருடம் சர்வதேச யோகா தினம் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலில் அதிகரிப்பதற்கு யோகா பயிற்சி உதவும் என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சர் கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு ஆகியோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு யோகாவின் முக்கியத்துவத்தை தெரிவித்தனர். இதேபோன்று மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ வர்தனும் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா தொடர்புடைய செயல்கள் அதிகரித்து உள்ளன. நம்முடைய உடல்சார்ந்த மற்றும் மனம் சார்ந்த சுகாதார விஷயங்களை பராமரிக்க யோகா நமக்கு உதவி புரிந்துள்ளது. யோகா அல்லது பிற உடற்பயிற்சிகளை நம்முடைய அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக நாம் வைத்து கொள்ள வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி நமது உடலில் அதிகரிப்பதற்கு யோகா பயிற்சி உதவும்." என்று அவர் கூறினார்.