தடுப்பூசிகள் குறித்த பொய் செய்திகள் ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் : சுகாதாரத்துறை அமைச்சர் கவலை.!
இந்தியாவில் தற்பொழுது இரண்டாவது அலை தாக்கம் குறைவாக இருந்து வருகிறது. இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்க முடியும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, தற்போது தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு முயற்சிகளையும், யுக்திகளையும் கையாண்டு வருகிறது.
ஆனால் சில மக்கள் இன்னும் தடுப்பூசி மீதான நம்பிக்கைகளை அவர்கள் இன்னும் பெறவில்லை. குறிப்பாக ஏழை மக்கள் போலியான செய்திகள் மூலம் பரப்பப்படும் தகவல்கள் மூலமாக, அவர்கள் தடுப்பூசி தங்களுக்கு போட்டுக் கொண்டால் எங்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள். எனவே இதுகுறித்து "கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தியால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்" என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகாதினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமது இல்லத்தில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் யோகாசனங்களை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்திகள் ஏழை மக்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.