இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத்தில் அமைந்துள்ள கோவில்களுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கொரோனா தொற்று காரணமாக உத்தராகண்டில் உள்ள சாமோலி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தர்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டும் யாத்திரை மேற்கொள்ள, உத்தராகண்ட் அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் அரசு அனுமதி அளித்த இந்த மூன்று மாவட்டத்தை சேர்ந்த மக்களும் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களுக்கு யாத்திரை மேற்கொள்ள உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் முதல்வர் தீரத்சிங் ராவத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது. ஆண்டு தோறும் பத்ரிநாத், கேதார்நாத்தில் அமைந்துள்ள கோவில்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சாமோலி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தர்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டும் யாத்திரை மேற்கொள்ள உத்தராகண்ட் அரசு அனுமதி அளித்தது.
உத்தராகண்ட் அரசின் இந்த யாத்திரை அனுமதிக்கு எதிரான வழக்கு நேற்று உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது "யாத்திரைக்கான நடைமுறைகள் தொடர்பான அரசின் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது. கும்பமேளாவிலும் இதேபோல் அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல், கொரோனா பரவல் அதிகரித்தது. கோவில் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரலையாக நாடு முழுதும் ஒளிபரப்புங்கள் என, நாங்கள் கூறுவது ஆன்மிக மரபுக்கு எதிரானது என்கிறீர்கள் பலர். ஆனால் சாஸ்திரங்கள் எழுதப்பட்டபோது,தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்றுவது மட்டுமே அவசியம் என்பதால், புனித யாத்திரை மேற்கொள்வதற்கான அரசின் உத்தரவிற்கு தடை விதிககப்படுகிறது." என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.