'காஷ்மீரில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' : ஜக்மோகன் சிங் ரெய்னா!
சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரில், இரண்டு சீக்கிய பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி, முஸ்லிமாக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நீதிமன்ற வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பலத்த போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு பிறகு காஷ்மீர் ஆளுநரின் உதவியுடன் அந்த இரண்டு சீக்கிய பெண்களை பத்திரமாக மீட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில் "ஜம்மு - காஷ்மீரில் மத மாற்ற சம்பவங்கள் தொடர்வதால், மதமாற்ற தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு, வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். இதுபோன்ற சட்டங்கள், மதம் மற்றும் இன நம்பிக்கை உள்ளோரை காப்பாற்றுவதாக அமையும்." என்று அவர் கூறினார்.