இந்திய கோவாக்சின் தடுப்பூசி கொரோனாவுக்கு பெஸ்ட் - மூன்றாம் கட்ட ஆய்வில் சூப்பர் ரிசல்ட்!
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு மக்களுக்கு இலவசமாக, அரசு மருத்துவமனையில் வழங்கி வருகிறது. மேலும் நமது நாட்டில் தற்போது டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எதிராக 77.8% செயல்படுவதாக பாரத் பயோ டெக் நிறுவனம் நடத்திய மூன்றாம் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி மரபணு உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவித்தது.
இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் அந்த நிறுவனம் கூறுகையில் "கொரோனா தொற்று பாதிப்புள்ள 25,800 நோயாளிகளில் 18 முதல் 98 வயதுள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. குறிப்பாக, 25 இடங்களில் இந்த கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக 77.8% செயல்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று லேசாக மற்றும் மிதமாக கொண்ட நோயாளிகளுக்கு 78% பலனளிக்கிறது. மேலும் தீவிரமாக கொரோனா தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு எதிராக 93% செயல்படுகிறது. அறிகுறி தெரியாத கொரோனா தொற்றுக்கு எதிராக 63% மற்றும் டெல்டா வகை கொரோனாவிற்க்கு எதிராக 65% செயல்படுகிறது." இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.