"முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு ஹிந்துவே அல்ல" - ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

Update: 2021-07-05 07:27 GMT

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த, முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் சார்பில் "முதலில் ஹிந்துஸ்தான் முதலில் ஹிந்துஸ்தானி"  என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் நடந்த இந்த  கருத்தரங்க நிகழ்ச்சியில்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.


அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது "நான் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ, ஓட்டு வங்கி அரசியலுக்காகவோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் என்பது அரசியல் கட்சி இல்லை. பாரத தேசத்தை பலப்படுத்தவும், நாட்டின் அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் தான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் செயல்படுகிறது. முதலில் நாம் அனைவரும் இந்தியர்கள்.

நமது எண்ணம் மற்றும் சிந்தனையில் முதலில் இந்தியாதான் இருக்க வேண்டும். மக்கள் எவ்வாறு வழிபாடு நடத்துகிறார்கள் என்பதை வைத்து வேறுபாடு காட்ட முடியாது. முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு ஹிந்துவே அல்ல. இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்ற பொய்யான பிம்பம் மற்றும் தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர், இதை உண்மை என்று நம்பி  முஸ்லிம்கள் அதில் சிக்கிக்கொள்ளக்கூடாது.


நாட்டில் ஒற்றுமை இல்லாமல் முன்னேற்றம் என்பது சாத்தியமே இல்லை. ஒற்றுமையின் அடிப்படையாக விளங்குவது தேசியத்துவமும், முன்னோர்களின் பெருமையும் தான். கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மரபணுதான் உள்ளது. நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் ஆதிக்கம் இங்கு இருக்க முடியாது மாறாக இந்தியர்களின் ஆதிக்கம் தான் இங்கு இருக்க வேண்டும்." என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News