அல்கொய்தாவின் மிக பெரிய தாக்குதல் திட்டத்தை முறியடித்த இந்தியா !

Update: 2021-07-12 11:10 GMT

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பாக அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் இந்திய நாட்டின் சுதந்திர தினத்தன்று நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர். இந்த நிலையில் அந்த இரண்டு நபரை உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், காவல் துறையினர் கைது செய்தனர்.


இது குறித்து உத்தர பிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் கூறுகையில் "லக்னோ உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி நமது நாட்டின் சுதந்திர தினத்தன்று நாசவேலைகளை செய்வதற்காக  அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த மின்ஹாஸ் அகமது மற்றும் மசீருதீன் ஆகிய 2 பேர் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளனர். இவர்களை பயங்கரவாத தடுப்பு காவல் படையினர், லக்னோவில் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்த வெடிபொருட்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


இருவரும் அல்கொய்தா அமைப்பின் உத்தரபிரதேச மாநில அமைப்பின் தலைவரான உமர் ஹல்மண்டியின் கட்டளைப்படி சுதந்திர தினத்தன்று மாநிலத்தின் பல நகரங்களில் பயங்கரவாத செயல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.முக்கியமான இடங்களிலும், நினைவுச்சின்னங்களிலும், மக்கள் கூட்டம் கூடுகிற இடங்களிலும் வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தவும், மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

இதற்காக அவர்கள் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் சேகரித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளின் கூட்டாளிகளை கைது செய்வதற்கு பல இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

மேலும் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையின்போது, அவர்களது கூட்டாளிகள் வீடுகளை விட்டு ஓடி விட்டதாக தெரிவித்தனர். உள்ளூர் காவல் துறையுடன் சேர்ந்து, பயங்கரவாத தடுப்பு படையினர் அவர்களின் கூட்டாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News