கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக எச்சரிக்கும் இந்திய மருத்துவ சங்கம்!

Update: 2021-07-19 10:40 GMT

கேரளாவில் நேற்று மட்டும் 13,956 நபர்களிடம் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, மேலும் 81 பேர் கொரோனா நோயால்  இறந்துள்ளனர். இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் ஜூலை 18 முதல் ஜூலை 20 வரை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துணிக் கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடை, பரிசுப் பொருட்கள் கடை உள்ளிட்டவற்றை திறக்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.   


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் மத்திய அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜூலை 18) முதல் மூன்று நாட்களுக்கு கொரோனா  கட்டுப்பாடுகளை பினராயி விஜயன் தளர்த்தியுள்ளது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இதனை அடுத்து கேரள அரசின் இந்த செயலை விமர்சித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், தளர்வுகளை திரும்ப பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று எச்சரித்துள்ளது.


இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பினராயி விஜயன் எடுத்துள்ள இந்த முடிவு வேதனை அளிக்கிறது. காஷ்மீர், உத்தரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக  பாரம்பரியமான யாத்திரைகளை மற்றும் திருவிழாக்களை அந்த மாநில அரசுகள் ரத்து செய்துள்ளது.

ஆனால் கல்வி அறிவு அதிகம் பெற்ற கேரளா மிகவும் பிற்போக்கு தனமாக  முடிவு எடுத்தது துரதிர்ஷ்டவசமானது. கேரளா முதலமைச்சர் இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் கேரளா  அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும்." என்று அந்த அறிக்கையில்  காட்டமாக கூறியுள்ளது.

Tags:    

Similar News