ஊரடங்கு காலத்தில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜரின் செயலை பிரதமர் மோடி பாராட்டு!

Update: 2021-07-20 01:30 GMT

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தவிக்கும் மக்களுக்கு பல தரப்பு மக்கள் தேவையான உதவிகளை செய்து வந்தனர். பல அரசியல் கட்சிகளும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து உதவி புரிந்தனர். இந்த நிலையில்  கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் பிரமிளா சிங், சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சையை அளித்து வந்தார். பிரமிளா சிங்கின் இந்த செயலை கண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தானின் கோட்டாவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் பிரமிளா சிங். இந்தியாவில் கொரோனா பரவல் துவங்கியது முதல் ஒன்றரை ஆண்டுகளாக ஆதரவற்று தெருக்களில் சுற்றி வரும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சையை இவர் அளித்து வருகிறார். இந்த பணிகளில் அவரது தந்தை ஷியாம்வீர் சிங்கும் உதவியாக இருக்கிறார். இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி பிரமிளா சிங்கை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.


பிரதமர் மோடி எழுதிய அந்த கடிதத்தில் கூறியதாவது "கொரோனா ஊரடங்கால் தெருவில் சுற்றிய விலங்குகள் உணவு கிடைக்காமல் தவிப்பதை அறிந்து அவற்றுக்கு உதவிய உங்களின் நடவடிக்கை சமுதாயத்திற்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கொரோனா காலம் மனிதர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடன் நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கும் கடினமானதாகவே உள்ளது.

இதுபோன்ற நிலையில் ஆதரவற்ற விலங்குகளின் தேவைகளை உணர்ந்து அவற்றுக்காக தனிப்பட்ட முறையில் பணியாற்றியது பாராட்டுக்கு உரியது.முன்னாள் மேஜர் பிரமிளாவும் அவரது தந்தையும் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்வதோடு மட்டுமல்லாமல், மேலும் பலரையும் இதுபோன்ற சேவைகளில் ஈடுபடுத்த ஊக்கப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்." என்று பிரதமர் தெரிவித்தார்.

Tags:    

Similar News