தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாவதை தடுத்து நிறுத்துங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
அரசுத் துறைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்கள் மத்தியில் நமது தேசிய கொடியை கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு இருப்பதை காண முடிகிறது. எனவே நமது தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதனை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியா சுந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவின்போது பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தேசிய கொடியை பயன்படுத்துவது வழக்கம். அப்போது அவர்கள் தேசிய கொடியை கையில் பிடித்துக்கொண்டு செல்லும்போது வழியில் கீழே போட்டு விடுவதை பல இடங்களில் காண முடிகிறது. நமது நாட்டின் தேசிய கொடி கம்பீரமாக பரப்பது மட்டுமே அனைவரும் உறுதி செய்ய வேண்டும். ஆனால் பல இடங்களில் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சாலைகளில் கொடிகள் வீசப்பட்டிருப்பதை காண முடிகிறது. எனவே இதனை தவிர்க்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: விளையாட்டு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் காகிதத்தால் செய்யப்பட்ட தேசிய கொடியை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்னர் தேசிய கொடிகளை தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்று கண்ணியமாக வைக்க வேண்டும். ஆங்காங்கே சாலைகளில் வீசி தேசிய கொடிகளை அவமதிப்பு செய்யக்கூடாது. இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar