நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளும் சில கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில், இனிமேல் மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தென்பட்டதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் வரும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று முழுமையாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் சில பேர் மட்டுமே தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 100 கோடிக்கும் அதிகமானோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசு அறிவித்த அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளை இனிமேல் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் முககவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை தவறாமல் பின்பற்றுவது சமூகத்திற்கு நல்லது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar