நிலக்கரி வாங்கிய தொகையை இதுவரை தமிழக அரசு செலுத்தவில்லை - மத்திய அரசு தகவல்!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்ய, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த இரு வாரங்களாக, மின்வெட்டு உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு மின்சார தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது.
அதாவது, "மே மாத இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதி செய்ய மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இதுவரை நான்கு மாநிலங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
"மேலும் தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் ஆலோசனைகளை செயல்படுத்தவில்லை" என்றும்,
"தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், நிலக்கரி வாங்கியதற்கு 1.05 லட்சம் கோடி தொகையை 'கோல் இந்தியா' நிறுவனத்திற்கு செலுத்தவில்லை" என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.