பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய சேவா தீர்த், கர்த்தவ்யா பவன் அலுவலக வளாகங்கள்!!
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட சேவா தீர்த், கர்த்தவ்யா பவன் அலுவலகங்களை திறந்து வைத்தார். இந்த வளாகங்களில் பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், அமைச்சரவை செயலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ளன.
இந்த திறப்பு விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்லை இந்த திறப்பு விழா குறிக்கிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய கட்டிட வளாகங்கள் நவீன முறையில், எதிர்காலத்திற்கு ஏற்ப, தேவையான வசதிகளுடன் நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இவை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலகங்கள், பொது இடைமுக மண்டலங்கள், மையப்படுத்தப்பட்ட வரவேற்பு வசதிகள் உள்ளன.
இந்த வளாகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், நீர் பாதுகாப்பு அம்சங்கள், கழிவு மேலாண்மை தீர்வுகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கி உள்ளது.
இது அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான, எளிதில் பயன்படுத்தக்கூடிய சூழல் அமைப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.