ஆந்திரப் பிரதேசம்: கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, ஆந்திர பிரதேச மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திராவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகைகளில் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்ய எண்ணினர் . அதன் ஒரு பகுதியாக பிரதமர் ஹெலிகாப்டரில் பறக்கும் பொழுது, ஆகாயத்தில் கருப்பு பலூன்களை பறக்கவிட காங்கிரஸார்கள் திட்டமிட்டனர்.
பிரதமர் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவிற்கு சிறப்பு விமானத்திலும், பின்னர் ஹெலிகாப்டரில் பீமாவனத்திற்க்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் பலூன்களுடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த மூன்று நபர்களை தடுத்தனர். பின்னர் ராஜீவ் ரதன் மற்றும் ரவி பிரகாஷ் என்ற இரண்டு காங்கிரஸ்காரர்கள் கட்டுமான கட்டிடத்தில் ஏறி கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.
பிரதமரை ஏற்றிப் பறந்து செல்லும் Mi17s ஹெலிகாப்டருக்கு அருகே, காங்கிரஸ்ஸார்களால் பறக்க விட்ட பலூன்களும் பறந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு பாதுகாப்பு குழு, ஆந்திர காவல் துறையினரிடம் இச் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் கேட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தில் இதே போன்று பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.