"ஜக்தீப் தங்கர் ஒரு விவசாயி மகன்" - பா.ஜ.க'வின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக, மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி மர்மூ போட்டியிடுகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் நேற்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரை அறிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தங்கருக்கு வயது 71. எம்பி மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது இவர் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இவர் குறித்து நேற்று பிரதமர் மோடி டுவிட்டரில் "விவசாயி மகனான ஜக்தீப் தங்கரின் சிறந்த பண்பை அனைவரும் அறிவார்கள். சட்டம், ஆட்சி உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த அனுபவம் கொண்டவர். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் நலனுக்காக அரும்பாடுபட்டவர். அரசியல் சாசனத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட ஜக்தீப் தங்கர் நாடாளுமன்ற விவகாரங்களில் ஞானம் கொண்டவர். எனவே, மாநிலங்களவை தலைவராக சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்பார். இவர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது"
என்று பதிவிட்டுள்ளார்.