உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியா.. பிரதமரின் தொலைநோக்குப் பார்வை..
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசுப் பணிகளுக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வழங்கினார். நிதித்துறை, அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 109 பேருக்கு திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்றும் அதனை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து புதிய இந்தியா விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவாகி இருப்பதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 100-வது சுதந்திர தினத்தில் வளர்ந்த நாடு என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
2014 க்கு முன்பு இந்தியாவில் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன என்றும் ஆனால் இப்போது நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றார்.
Input & Image courtesy: News