பிரதமருக்கு வழங்கப்பட உள்ள லோக்மான்ய திலக் தேசிய விருது.. எங்கு தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 1 ஆம் தேதி இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்குப் பயணம் மேற் கொள்கிறார். காலை 11 மணியளவில் தக்துஷேத் மந்திரில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்கிறார். காலை 11.45 மணிக்கு அவருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப் படுகிறது. அதன்பின், மதியம், 12:45 மணிக்கு, மெட்ரோ ரயில்களை கொடியசைத்து துவக்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் பணிகள் முடிக்கப்பட்ட பிரிவுகளில் சேவைகளைத் தொடங்கி வைக்கும் வகையில் மெட்ரோ ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த பிரிவுகள் புகேவாடி நிலையத்திலிருந்து சிவில் நீதிமன்றம் ரயில் நிலையம் வரையிலும் கார்வேர் கல்லூரி ரயில் நிலையம் முதல் ரூபி ஹால் கிளினிக் ரயில் நிலையம் வரையும் இயக்கப் படுகின்றன. இந்த திட்டத்திற்கு 2016-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். புதிய பிரிவுகள் புனே நகரின் முக்கிய இடங்களான சிவாஜி நகர், சிவில் நீதிமன்றம், புனே மாநகராட்சி அலுவலகம், புனே ஆர்டிஓ அலுவலகம் மற்றும் புனே ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும். நாடு முழுவதும் நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவான நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை மக்களுக்கு வழங்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதன் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக இந்த மெட்ரோ தொடக்க விழா அமைந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள சில மெட்ரோ நிலையங்களின் வடிவமைப்பு சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை முறைகளில் இருந்து உத்வேகம் பெற்றதாக அமைந்துள்ளது. சத்ரபதி சம்பாஜி உத்யான் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டெக்கான் ஜிம்கானா மெட்ரோ நிலையங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் படை வீரர்கள் அணியும் தலைக்கவசம் போன்ற ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இது "மாவாலா பகாடி" என்றும் அழைக்கப்படுகிறது. சிவாஜி நகர் சுரங்க மெட்ரோ நிலையம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜால் கட்டப்பட்ட கோட்டைகளை நினைவூட்டுகிறது.
Input & Image courtesy: News