மத்திய அரசின் முக்கிய திட்டங்கள். கிராமப்புற வங்கிகள் கவனம் கொடுங்க.. நிதி அமைச்சரின் அட்வைஸ்..
மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் மண்டல கிராமப்புற வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தென் மண்டல கிராமப்புற வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நிதிப்பணிகள் துறை செயலர், மண்டல கிராமப்புற வங்கிகளின் பல்வேறு நிதி அளவீடுகள் பற்றிய விளக்கத்தை அளித்ததால், கிராமப்புற வங்கிகளின் நிதி செயல்திறன் பற்றி விவாதங்கள் நடந்தன.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் முக்கிய திட்டங்களான பிஎம் ஸ்வநிதி, அடல் ஓய்வூதிய திட்டம், பிஎம் ஜன் தன் திட்டம், முத்ரா திட்டம், உழவர் கடன் அட்டை, கால்நடை வளர்ப்பு, மீன் வளம் போன்றவற்றில் மண்டல கிராமப்புற வங்கிகள் தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், அதில் முழுமையான நோக்கத்தை அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். தென் மண்டல கிராமப்புற வங்கிகளின் வாராக் கடன்கள், கடன் வழங்கல் ஆகியவை தேசிய சராசரியை விட சிறப்பாக இருந்ததை எடுத்துக்காட்டிய அமைச்சர், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு விகிதத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொழில்நுட்பம், கடன் மேலாண்மை அமைப்பு மற்றும் கோர் பேங்கிங் சிஸ்டம் ஆகியவற்றை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகிய பணிகளை தென் மண்டலத்தின் கிராமப்புற வங்கிகளில் காலக்கெடுவுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். அதிக டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் அரசின் முயற்சிக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் செயல்படும் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Input v& Image courtesy: News