இந்தியாவில் வீரியமெடுத்த கொரோனா 2-வது அலை : மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.!
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,31,968 கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மொத்த கொரோனா எண்ணிக்கை இப்போது 1,30,60,542 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் அடிப்படையில் இந்தியா இப்போது உலக அளவில் 4வது நாடாக உள்ளது. அக்டோபர் 18 க்குப் பிறகு ஒரே நாளில் மிக அதிக அளவாக 780 பேர் தொற்றுநோயால் இறந்துள்ளனர். இதன் மூலம் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,67,642 ஆக உள்ளது.
இதே போல் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9,79,608 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 7.5 சதவீதமாகும். நாட்டில் மீட்பு விகிதம் மேலும் 91.22 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் படி, நாட்டில் இதுவரை மொத்தமாக 25,40,41,584 மாதிரிகள் கொரோனாவுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 13,64,205 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்களுடன் மெய்நிகர் கொரோனா மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். "மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது. கொரோனா நிலைமையைச் சமாளிக்க உங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கை விதிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், மைக்ரோ-கட்டுப்பாட்டு மண்டலங்களை ஒரு மிஷன் முறையில் அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் ஏப்ரல் 11 (ஜோதிராவ் பூலேவின் பிறந்த நாள்) முதல் ஏப்ரல் 14 வரை (பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாள்) கொரோனாவுக்கான டிக்கா உட்சவ் (தடுப்பூசி திருவிழா) அனுசரிக்க பிரதமர் மோடி முன்மொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.