இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் என இரண்டு தடுப்பூசியும் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கோவேக்சின் தடுப்பூசி தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனை தரவுகள் தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோவேக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 77.8 சதவீதம் செயல் திறன் கொண்டது என்று தெரியவந்துள்ளது.
பாரத் பயோடெக்கின் இந்த தரவுகளை நிபுணர் குழு ஆய்விற்காகவும் மற்றும் ஒப்புதலுக்காகவும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. 3 ஆம் கட்ட தரவுகளுக்கு தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கப்படுவதன் மூலம், விரைவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கலாம் எனத்தெரிகிறது.