நேற்று ஒரே நாளில் 86.16 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மாபெரும் சாதனை!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி, இன்று முதல் நடந்து வருகிறது. கடந்த மே 1 ஆம் தேதியில் இருந்து 18 வயது மேற்பட்டோர் அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் உலகத்திலேயே அதிக பட்சமாக 86.16 லட்சம் தடுப்பூசிகளை இந்தியாவில் செலுத்தியுள்ளோம் என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 69 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு நாட்டின் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "நாட்டில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை இது வரை இல்லாத அளவுக்கு பெரிய சாதனையை அடைந்துள்ளோம். நாம் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க நமக்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம். தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் மற்றும் இதை சாத்திய படுத்திய முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்" என்று அவர் கூறினார்.
இதனை அடுத்து மத்திய சுகாதார அமைச்சர் இன்று கூறுகையில் "இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரத்து 373 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. இது உலகம் முழுவதும் இதுவரை போடப்பட்ட ஒரு நாள் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும். இந்த பெரும் சாதனையை சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பிரதமர் மோடியின் தலைமையில் அனைத்து மக்களும் மற்றும் அரசாங்கமும் இந்த கொரோனா நோயை வீழ்த்த இணைந்து பாடுபடுவோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.