இந்தியாவிற்கு ₹90 கோடி மதிப்புள்ள குளிர்சாதன உபகரணங்கள்: ஜப்பான் அரசு அறிவிப்பு!
இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா அறிகுறி குறைய தொடங்கியிருக்கும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மேலும் நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே கொரோனா தடுப்பூசிகளை பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன கட்டமைப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் அதிகமான அளவில் தேவைப்படுகின்றது. ஏனென்றால் தடுப்பூசி மத்திய அரசிடமிருந்து, மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகின்றன. பிறகு மாநிலங்களிலிருந்து, மாவட்டங்களுக்கு அவை பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஆகவே அவற்றை தகுந்த உபகரணங்கள் மூலமாக தான் பாதுகாக்க முடியும்.
அந்த வகையில் தற்போது, கொரோனா தடுப்பூசிகளை பாதுகாக்கும் பொருட்டு குளிர்சாதன கட்டமைப்பு உருவாக்க 90 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்குவதாக ஜப்பான் அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் வீணாகாமல் இருக்க அவற்றை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிப்பது அவசியம். இதற்காக நம் நாட்டிற்கு கிழக்காசிய நாடான ஜப்பான் 90 கோடி ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன வசதிக்கான உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து ஜப்பான் வெளியுறவுத் துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜப்பானின் அவசர மானிய உதவித் திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் வாயிலாக ஒவ்வொரு நாட்டிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை பாதுகாக்க இந்தியாவிற்கு 90 கோடி ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன வசதிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்படும். உலகின் வளரும் நாடுகளில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்பது எங்கள் இலக்காக உள்ளது என்று ஜப்பான் வெளியுறவுத் துறை கூறி உள்ளது.