குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை : SII அறிவிப்பு.!

Update: 2021-06-18 12:55 GMT

இந்தியாவில் மூன்றாவது அலை காரணமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. இருந்தாலும், அதற்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசி வந்துவிட்டால் அவர்களை நோய் தொற்றிலிருந்து எளிதாக பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல பெற்றோர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது அதற்கான ஒரு முயற்சியில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்(SII) அடுத்த மாதம் நோவாவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசி மருந்தை குழந்தைகளிடம் செலுத்தி பரிசோதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் ஆகியவற்றுடன், சீரம் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்து, கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரித்து வருகிறது. இது தவிர, அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையையும் சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், நோவாவாக்ஸ் நிறுவனம் கண்டு பிடித்துள்ள தடுப்பூசி மருந்து, கொரோனா வைரஸ் எதிர்ப்பில் 90 சதவீத ஆற்றலுடன் செயல்படுவது பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது. இது மிகவும் பாதுகாப்பானது எனவும் முடிவில் தெரியவந்துள்ளது.


இதைத் தொடர்ந்து நோவாவாக்ஸ் நிறுவனம், அதன் தடுப்பூசி மருந்திற்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், சீரம் நிறுவனம் இந்தியாவில் நோவாவாக்ஸ் தடுப்பூசி மருந்தை செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. அதற்கு முன் ஜூலையில், குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளது. 

Similar News