பிரதமர் நரேந்திர மோடியின் 105வது மன்கி பாத் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ரேடியோ மூலம் பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களிடம் நேரடியாக உரையாற்ற தொடங்கினார். அதாவது ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தின் முப்பதாம் தேதி அன்று இந்த நிகழ்ச்சி நூறாவது எபிசோட் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 104வது எபிசோட் ஒளிபரப்பான நிலையில் இன்று பிரதமரின் 105ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஹைதராபாத், சென்னை மற்றும் கோவை போன்ற பகுதிகளில் பொது நூலகங்களை அமைக்க வீடு வீடாக சென்று புத்தகங்களை சேகரித்து உதவிய 12 வயது பள்ளி மாணவி அகர்ஷனாவை பிரதமர் நரேந்திர மோடி இன்றைய நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார். மேலும் சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேந்திர பிரசாத் பாம்புகள் மற்றும் புறாக்களை மீட்டு அக்கறையுடன் அவற்றை பாதுகாத்து வருவதாகவும் ஆட்டோ டிரைவர் ராஜேந்திர பிரசாத்தை பாராட்டி உள்ளார்.