2-DG மருந்து உருமாற்றம் அடையும் கொரோனாவையும் எதிர்க்கும் : ஆராய்ச்சி முடிவு.!

Update: 2021-06-18 12:57 GMT

இந்தியாவில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் சூழ்நிலை காரணமாக முன்னேற்பாடுகள் பலவும் மத்திய அரசின் சார்பாக செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டு போய் சேர்ப்பது. தடுப்பூசி மட்டுமின்றி, இந்தியாவில் கண்டறியப்பட்ட பவுடர் மருந்தாக உள்ள 2-DG கொரோனா மருந்து தற்போது உள்ள உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதற்காக ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO உருவாக்கிய கொரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் மருந்தின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருப்பதை குறைக்க முடிவதாகவும் நோயாளிகள் விரைவில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தற்பொழுது உருமாற்றம் அடைகின்ற கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இந்த 2-DG மருந்து செயல் திறன் மிக்கதா? என அன்னத் நாராயண் பட், அபிஷேக் குமார், யோகேஷ் ராய், திவியா வேதகிரி உள்ளிட்டோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன் பிறகு, இந்த 2-DG மருந்து கொரோனாவின் அனைத்து வகை உருமாறிய வகைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இது குறித்து இன்னும் முழுமையான செய்திகள் வெளிவரவில்லை முதல் கட்ட ஆராய்ச்சியில் இது கண்டறியப் பட்டுள்ளது. இனிவரும் கட்டங்களில் முடிவைப் பொறுத்து இதன் தன்மை வேறு படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News