ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய சக்தி: பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு!
2023-ல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய சக்தி, உறுதிப்பாடு மற்றும் உற்சாகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு.
ஏரோ இந்தியா 2023-ல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிகழ்ச்சியான மந்தனில் இன்று பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய சக்தி, புதிய உறுதிப்பாடு, மற்றும் புதிய உற்சாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப கட்டமைப்பை பின்பற்றுவதில் ஆர்வத்துடன் உள்ளதாகவும் இது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என்றும் கூறினார். அனைத்து துறைகளிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பாராட்டு தெரிவித்த அவர் இவற்றின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளதுடன் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டவை யூனிகார்ன் நிறுவனங்களாக உள்ளன என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு புதுமைகள் அமைப்பின் கீழ் ஐடெக்ஸ் முன்முயற்சி தொடங்கப் பட்டுள்ளதாகவும், இது நாடு முழுவதும் உள்ள திறன்களை வெளிக்கொண்டுவரும் என்றும் ராஜ்நாத் சிங் அவர்கள் கூறினார். இளைஞர்களின் புதுமைத் திறன்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகக் கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர், இதன் மூலம் அவர்களை வேலைவாய்ப்பு உருவாக்குபவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனால் உள்நாட்டிலேயே பாதுகாப்பு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் நமது இறக்குமதி சார்பு குறையும் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்டார்ட்அப் மந்தன் நிகழ்ச்சியில் உற்சாகமாக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்த அவர், புதுமைக் கண்டுபிடிப்புகளில் உலகின் களங்கறை விளக்கமாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
Input & Image courtesy: News