கர்நாடகவில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்.!
கர்நாடகவில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்.!
கர்நாடக மாநிலம், சிக்பலாபூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிக்பலாபூர் மாவட்டம், ஹீராநாகவேலி என்ற கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த குவாரியில் வெடிவைப்பதற்காக ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும், ஆந்திராவை சேர்ந்த 3 பேரும் மற்றோருவரான நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக அந்த கிராம மக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இடத்திற்கு மாநில அமைச்சர் கனிமவளத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்குவாரி வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.