இலங்கை சிறையில் உள்ள 69 மீனவர்கள் விடுவிக்கப்படுவர்- அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!

தமிழக மீனவர்கள் கொரோனா மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவர் மீதும் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறைப் பணியாளர்கள் எந்திரம் மூலம் தெளித்திருப்பதையும், அது மனிதத் தன்மையற்ற செயல் என்பதையும் வெளியுறவு அமைச்சரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

Update: 2021-12-23 02:09 GMT

இது தொடர்பாக பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று காலை (டிசம்பர் 22) நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபாட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 69 பேர், அவர்கள் பயணித்த 11 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து அமைச்சரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விளக்கிக் கூறினார்.

தமிழக மீனவர்கள் கொரோனா மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவர் மீதும் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறைப் பணியாளர்கள் எந்திரம் மூலம் தெளித்திருப்பதையும், அது மனிதத் தன்மையற்ற செயல் என்பதையும் வெளியுறவு அமைச்சரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சுட்டிக்காட்டினார். மனிதர்கள் மீது கிருமிநாசினியை பீய்ச்சி அடிப்பது உலக சுகாதார நிறுவனத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் விளக்கிக் கூறிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இத்தகைய அவலமான சூழலில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 69 பேரையும், அவர்களிடம் படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Full View

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து கவலை தெரிவித்தார். தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும், வெகுவிரைவில் 69 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் உறுதியளித்தார். இதற்காக வெளியுறவு அமைச்சருக்கு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Facebook

Image Courtesy:The Economics Times

Tags:    

Similar News